தியானம் கற்றுக் கொடுங்கள் - ஆன்மிகக் கதைகள்

 

ந்த வாலிபன் ஒரு குருகுலத்தில் பணியாளாக வேலை செய்தான். மற்றவர்களை போல அவனுக்கும் தியானம் கற்றுக் கொள்ள ஆசை வந்தது. குருவிடம் சென்று தன் விருப்பத்தை தெரிவித்தான்.

குருவும் அவனுக்கு தியானம் கற்றுத் தருவதாக கூறினார். அவனை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றார். அவனை அந்த அறையின் நடுவில் அமர வைத்தார். அவன் கண்களை மூட சொன்னார். அவனும் கண்களை நன்றாக மூடிக் கொண்டான். தான் சில மணி நேரம் கழித்து வருவதாகவும் அது வரை கண்களை திறக்கக் கூடாது என்று கூறி அவனை அந்த அறையில் தனியாக விட்டுச் சென்றார் குரு.



சிறிது நேரம் கழித்து அவனை வந்து பார்த்தார். அவன் தூக்கத்தில் இருக்கிறான் என்பதை தெரிந்து கொண்டார்.  இப்படியே அவன் அறைக்கு தியானம் செய்ய வருவதும் தூங்குவதுமாக ஒரு வாரம் சென்றுவிட்டது. அவன், தான் தியானத்தில் அமர்ந்தால் தனக்கு தூக்கம் வருகிறது என்று  குருவிடம் புலம்பினான்.

குரு சிந்தித்தார். எப்பொழுதும் போல நாளைக்கு தியானம் செய்ய வருமாறு அவனிடம் கூறி அனுப்பினார். அடுத்த நாள் அந்த வாலிபன் தியான அறைக்கு வந்தான். குரு அவனுக்காக காத்துக் கொண்டிருந்தார். வாலிபன் அவர் கையில் ஒரு கூடை இருப்பதை கவனித்தான். குரு அவனை அறையின் நடுவில் அமரச் சொன்னார்.


“நீ உண்மையிலேயே தியானம் கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறாயா?” என்று கேட்டார் குரு.

“ஆம் குருவே!” என்று உடனே பதில் கூறினான் வாலிபன்.

“அப்படியென்றால் நான் அடுத்து கூறுவதை கேட்டு நீ பதற்றப்பட கூடாது. நான் கூறும்படி நீ நடந்து கொண்டால் உனக்கு தியானம் கைகூடும்”

“கண்டிப்பாக தாங்கள் கூறும்படி நடந்து கொள்கிறேன் குருவே” என்று உறுதியுடன் கூறினான் வாலிபன்.

அவனைவிட்டு அறையின் ஓரத்திற்கு சென்றார் குரு. பிறகு கூடையை கீழே கவிழ்தினார். ஒரு பாம்பு கூடையிலிருந்து கீழே விழுந்தது. வாலிபன் பதறிப் போனான். “குருவே என்ன இது?” என்று பயந்து போய் கேட்டான்.

“பயப்படாதே! இதுவே உனக்கு தியானத்தில் முதல் பாடம். இனிமேல் நீ கண்களை திறந்து கொண்டு தியானம் செய்ய வேண்டும். உன்னுடைய கவனம் அந்த பாம்பின் மீது இருக்க வேண்டும். உன்னுடைய கவனம் வேறு பக்கம் திரும்பினால் அந்த பாம்பு உன்னை நோக்கி நகரும். உன்னுடைய கவனம் அந்த பாம்பின் மீது இருந்தால் அது அதே இடத்தில் இருக்கும். நீ தியானத்தை தொடங்கலாம்” என்று கூறி விட்டுச் சென்றார் குரு.

வாலிபனுக்கு முதலில் பாம்பைப் பார்க்க பயமாக இருந்தது. பிறகு பாம்பு அவனை நோக்கி வராமல் அங்கேயே தன்னை பார்த்து கொண்டிருப்பதை கவனித்தான். கதவு இருக்கும் பக்கம் திரும்பினான். பாம்பு உடனே அவனை நோக்கி முன்னேறியது. பாம்பின் பக்கம் கவனத்தை செலுத்தினான். பாம்பு அங்கேயே நின்று கொண்டது. தன் நிலமையை புரிந்து கொண்டான் வாலிபன். பாம்பை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.

குரு சிறிது நேரம் கழித்து அவனை காண அறைக்குள் நுழைந்தார். குரு அறைக்குள் நுழைந்ததைக் கூட அவன் கவனிக்கவில்லை. அவன் கவனமெல்லாம் பாம்பின் மீது இருந்தது. பிறகு பாம்பை எடுத்து கூடைக்குள் போட்டார். அப்போது தான் அவன் குரு இருப்பதையே உணர்ந்தான். குருவின் காலில் விழுந்தான். தன்னை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினான். குருவும் அவனை சிஷ்யனாக ஏற்றுக் கொண்டார்.

“எந்த ஒரு செயலையும் முழுமையாக செய்வதற்கு கவனம் மிக முக்கியம். கவனம் என்பது விழிப்புடன் இருப்பது. முதலில் நீ கண்களை மூடி அமர்ந்த போது தூங்கிப் போனாய். விழிப்புணர்வை கையாளும் முறை உன்னிடம் மந்தமாக இருப்பதை தெரிந்து கொண்டேன். உனக்கு கவனச் சிதறல் இருப்பதால் உன்னுடைய கவனத்தை ஒரு மையப் புள்ளியில் நிலை நிறுத்தவே இந்த பாம்பின் உதவியை நாடினேன். நான் நினைத்தபடியே உன் உயிர் மீதுள்ள பயமும் தியானத்தின் மீதுள்ள ஆர்வமும் உன்னுடைய கவனத்தை பாம்பின் மீது நிலைநிறுத்தியது. உன்னையே அது மறக்கச் செய்தது.

இனிமேல் இந்த பாம்பு உனக்கு தேவையில்லை. தியானம் என்பது ஒருவனின் உண்மையான இருப்பு. நீ தன்னிலையில் இருக்கும்போது அதாவது தியானத்தில் இருக்கிறபோது மற்ற எண்ணங்களை புறந்தள்ள உன் கவனத்தை ‘நான்’ என்கிற எண்ணத்தின் மீது வைத்துக் கொள். இது தான் பாம்பு. இந்த பாம்பின் மீது கவனத்தை செலுத்தவிடாமல் பிற எண்ணங்கள் உன்னை கண்டிப்பாக கவர்ந்திழுக்கும். விழிப்புடன் இருக்கும் நீ ‘நான்’ என்ற எண்ணத்திலிருந்து கவனத்தை திசை திருப்பாதே. உன்னுடைய முழு கவனமும் ‘நான்’ எண்ணத்தில் லயித்துவிட்டால் பிற எண்ணங்கள் உன்னை தொந்தரவு செய்யாது. காலப்போக்கில் மற்ற எண்ணங்களிலிருந்து விடுபடும்போது நான் என்ற எண்ணமும் கரைந்து தியானம், அதாவது உன்னுடைய உண்மையான இருப்பு வெளிப்படும். உன்னுடைய உண்மை நிலையே தியானம் என்பதை உணர்வாய்” என்று குரு அவனுக்கு போதனை வழங்கினார்.

No comments:

Post a Comment